செய்திகள்

குற்றாலம் வனப்பகுதியில் துப்பாக்கி - ஆயுதங்களுடன் 3 பேர் கைது

Published On 2016-12-27 08:03 GMT   |   Update On 2016-12-27 08:03 GMT
குற்றாலம் வனப்பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாகளை பறிமுதல் செய்தனர்.
செங்கோட்டை:

நெல்லை மாவட்டம் குற்றாலம் வனச்சரகத்திற் குட்பட்ட கண்ணுபுளிமெட்டு அருகே உள்ள பனிமுண்டம் வனப்பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியுடன் சுற்றி திரிவதாக வனச்சரகர் செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது தலைமையில் வனத்துறையினர் பனிமுண்டம் வனப்பகுதியில் பல்வேறு குழுக்களாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள வனப்பகுதிக்குள் சந்தேகப்படும்படி 6 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை வனத்துறையினர் விரட்டி பிடிக்க முயன்றனர். இதில் 3 பேர் சிக்கினர். மேலும் 3 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் தென்காசி அருகே உள்ள வல்லத்தை சேர்ந்த ராஜா, சுப்பிரமணியன், காலாங்கரையை சேர்ந்த கோமு என்பது தெரியவந்தது. 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டா, கத்தி, டார்ச் லைட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் வன விலங்குகளை வேட்டையாட வந்திருப்பது தெரியவந்தது. இவர்களுக்கு நாட்டு துப்பாக்கி, தோட்டாக்கள் எப்படி கிடைத்தது? இவர்கள் சொந்தமாக தோட்டா, துப்பாக்கி தயாரிக்கிறார்களா? என தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். தப்பியோடிய மேலும் 3 பேரை தீவிரமாக தேடி வருகிறோம்.

Similar News