செய்திகள்

அனுமதி கிடைக்காவிட்டால் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம்: சீமான்

Published On 2016-12-18 08:23 IST   |   Update On 2016-12-18 08:53:00 IST
இந்த ஆண்டும் அனுமதி கிடைக்காவிட்டால் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என நாம் தமிழர் கட்சியின் சார்பில் மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசினார்.
மதுரை:
 
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை பழங்காநத்தத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது-

ஜல்லிக்கட்டு என்பது விளையாட்டு அல்ல. அது தமிழரின் உயிரோடு உயிரான மரபு. தமிழரின் அடையாளமாக இருக்கும் அதனை ஏன் தடை செய்கிறார்கள் என்பது புரியாத ஒன்றாக இருக்கிறது.

தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்வதற்கு பின்னால் அரசியல் உள்ளது. எனவே தான் அதனை கொண்டு வருவதற்கும் அனைத்து தரப்பினரும் யோசிக்கின்றனர். ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனமானது என்று கருத்து கூறுகின்றனர். ஆனால் காளைகள் மீது நாம் வைத்துள்ள பற்று அவர்களுக்கு புரியாமல் இருக்கிறது.

கோவிலில் கடவுளை வணங்குவதற்கு முன்பாக நந்தி சிலையை நாம் வணங்குகிறோம். அதுபோல் வீட்டில் ஒரு உறுப்பினர் போலவும், குல தெய்வம் போலவும் மாட்டினை பாதுகாக்கின்றோம். ஆனால் அதனை பீட்டா அமைப்பினர் மாட்டினை கொடுமைப்படுத்துவதாக கூறி வருகின்றனர்.

கேரளாவில் யானைப் பந்தயம், ராஜஸ்தானில் ஒட்டகப்பந்தயம் போன்றவை நடக்கின்றன. ஆனால் அவற்றை எல்லாம் இந்த பீட்டா அமைப்பினர் தடை செய்யவில்லை. தமிழரின் பண்பாடாக விளங்கும் ஜல்லிக்கட்டை மட்டும் தடை செய்கின்றனர். யானை, ஒட்டகம், குதிரை போன்றவற்றை சந்தைப்படுத்த முடியாது. ஆனால் மாட்டினை சந்தைப்படுத்த முடியும். இந்த முக்கிய காரணத்திற்காக தான் பீட்டா அமைப்பினர் ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்கின்றனர். என்ன காரணத்திற்காக அவர்கள் ஜல்லிக்கட்டை தடை செய்கிறார்களோ அந்த காரணத்திற்காகத் தான் நாங்கள் அதனை நடத்த வேண்டும் என்று போராடுகிறோம்.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளியுங்கள், அல்லது தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தாருங்கள். யார் எதிர்த்தாலும் இந்த ஆண்டு தடையை மீறியாவது ஜல்லிக்கட்டு நடத்துவோம்.

அதிகாரத்தில் இருப்பவர்களும் இதுபற்றி குரல் கொடுக்க மறுக்கின்றனர். அதிகாரம் எங்கள் கையில் இருந்தால் ஜல்லிக்கட்டை அரசு விளையாட்டாக மாற்றி சிறப்பாக ஜல்லிக்கட்டை நடத்தி இருப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News