செய்திகள்

குப்பைகள் அகற்றப்படாததால் தொற்று நோய் பரவும் அபாயம்: பொதுமக்கள் அச்சம்

Published On 2016-12-18 01:49 GMT   |   Update On 2016-12-18 01:49 GMT
வார்தா புயலின் தாக்கம் காரணமாக சாலைகள், தெருக்களில் குவிந்து கிடக்கும் குப்பைகள் அகற்றப்படாததால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை:

‘வார்தா’ புயல் சென்னை அருகே கரையை கடந்தபோது கன மழையுடன் பலத்த சத்தத்துடன் பேய்க்காற்று வீசியது. புயலின் தாக்கம் காரணமாக மரங்கள் அடியோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. திரும்பிய திசை எல்லாம் மரங்கள் விழுந்து சென்னை சின்னாபின்னமானது.

புயலின் வேகம் தாங்க முடியாமல் விழுந்த மரங்கள் சென்னை முழுவதும் எடுக்கப்படாமலேயே உள்ளன. எம்.ஜி.ஆர். நகர், கொடுங்கையூர், பெரம்பூர், பெசன்ட் நகர், அடையாறு, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரக்கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளன.

சென்னையில் உள்ள பிரதான சாலைகளில் மரக்கழிவுகள் அடர்ந்த காடுகளில் இருப்பது போன்று இருபுறங்களிலும் கிடக்கிறது. அடர்ந்த புதர்களுக்கு இடையே வாகனங்களை இயக்குவதுபோன்ற நிலைக்கு வாகன ஓட்டிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.

ஒரு வாரமாக குப்பை அகற்றப்படாமல் இருப்பதால் ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட சில இடங்களில் தொட்டிகள் நிறைந்து சாலைகளில் குப்பைகள் பரவிக்கிடக்கின்றன. 6 நாட்களுக்கும் மேலாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால் சில பகுதிகளில் துர்நாற்றம் வீசி வருகிறது.

இதனால் கிருமிகள் உருவாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புயலுக்கு பின் அமைதி நிலவும் என்று கூறுவார்கள். ஆனால் சென்னையை பொறுத்தமட்டில் புயலுக்கு பின் அவதி தான் நிலவுகிறது. பொதுமக்களின் அன்றாட பணிகள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளன.

அரையாண்டு தேர்வு நடைபெற்று வருவதால் மாணவ-மாணவிகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். சாலைகள், தெருக்களில் விழுந்து கிடக்கும் குப்பை கழிவுகளை விரைவில் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வேரோடு சாய்ந்த மரங்கள் மற்றும் முறிந்து விழுந்த மரக்கிளைகளை நாங்கள் அகற்றி ஓரமாக போட்டுள்ளோம். அதையும் கூட அகற்றுவதற்கு மாநகராட்சி ஊழியர்கள் வருவதில்லை. மரக்கழிவுகள் மட்டுமின்றி அன்றாடம் போடப்படும் குப்பைகளை உடனடியாக அகற்றவேண்டும். பிளிச்சிங் பவுடர் தூவி சுகாதாரத்திற்கு வழிவகை செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், புயலில் சிக்கி முறிந்து, வேரோடு சாய்ந்த மரங்களை அகற்றும் பணியில் நாங்கள் முழுவீச்சில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். வெளியூர்களில் இருந்து கூடுதலான துப்புரவு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. வேரோடு சாய்ந்த மரங்கள் எந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றப்பட்டும், மரக்கழிவுகள், குப்பைகள் லாரிகளில் நிரப்பி குப்பை கிடங்குகளில் போட்டும் வருகிறோம். இன்னும் ஓரிரு தினங்களில் முழுமையாக அகற்றிவிடுவோம் என்றனர்.

Similar News