செய்திகள்

கோவையில் மணல் விலை திடீர் உயர்வு

Published On 2016-12-17 12:46 GMT   |   Update On 2016-12-17 12:46 GMT
கோவையில் கடந்த வாரம் ரூ.11 ஆயிரத்துக்கு விற்ற 2 யூனிட் மணல் தற்போது ரூ.2 ஆயிரம் வரை விலை உயர்ந்து ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோவை:

கொங்கு மண்டலம் கட்டுமான பணிகள் அதிகளவில் நடைபெறும் மண்டலமாக திகழ்கிறது. குறிப்பாக கோவை மாநகரில் அதிகம் கட்டிடவேலைகள் நடைபெற்று வருகிறது.

கடந்த 1 வாரமாக மணல் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. மணல் தட்டுப் பாட்டால் அதன்விலையும்  அதிகரித்துள்ளது.

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. சென்னை சேகர் ரெட்டியின் வீடு, அலுவலகம் மற்றும் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அவருக்கு சொந்தமான மணல் குவாரிகளில் அதிரடி சோதனையை வருமான வரித்துறையின் மேற்கொண்டனர். இதனால் அவரது மணல்குவாரிகள் மூடப்பட்டது. ஒருசில குவாரிகளே தற்போது செயல்பட்டு வருகிறது.

இது குறித்து கோவை மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அங்கண்ணன் கூறியதாவது:-

500, 1000 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிப்பையொட்டி மணல் விற்பனையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இது தவிர ஒரு சில மணல்குவாரிகள் மட்டுமே கரூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது. ஒரு லோடு மணல் ஏற்ற 2 அல்லது 3 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. 1 யூனிட் மணல் ரூ.4, 500-க்கு விற்கப்பட்டது.

தற்போது மணல் தட்டுப்பாடு காரணமாக கோவையில் சில இடங்களில் 5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லாரியில் 2¼ யூனிட் வரை மணல் ஏற்றலாம்.

கடந்த 1 வாரமாக ஒரு லோடு மணல் விற்பனை 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை உயர்வு ஏற்பட்டுள்ளது. அதாவது கடந்த வாரம் ரூ.11 ஆயிரத்துக்கு விற்ற 2 யூனிட் மணல் தற்போது ரூ.2 ஆயிரம் வரை விலை உயர்ந்து ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலை விரைவில் மாறும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News