செய்திகள்

குடிநீர் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும்: பாரதீய ஜனதா வலியுறுத்தல்

Published On 2016-12-16 17:23 IST   |   Update On 2016-12-16 17:23:00 IST
புதுவையில் குடிநீர் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.

புதுஎச்சேரி:

புதுவை பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் குடிநீர் கட்டணத்தை உயர்த்தவும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீருக்கு கூடுதல் வரி விதிக்கவும் புதுவை அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு ஏழை எளிய மக்களை மிகவும் பாதிக்கும் முடிவாகும். இதனை புதுவை பா.ஜ.க. வன்மையாக கண்டிக்கிறது.

புதுவையில் ஸ்டார் அந்தஸ்து ஓட்டல்கள், ரசாயன தொழிற்சாலைகள், கேபிள் டி.வி., ரியல் எஸ்டேட் தொழில் ,தனியார் கல்லூரி மற்றும் மருத்துவ கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களிடம் முறையாக வரிவசூல் செய்தால் புதுவை மக்களுக்கு குடிநீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்டவைகள் குறைந்த கட்டணத்தில் கொடுக்க முடியும்.

எனவே மருந்து கம்பெனிகள், ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் உபயோகப்படுத்தப்படும் குடிநீருக்கு முறையான வரி வசூல் செய்து ஏழை-எளிய மக்கள் மீது போடப்படும் குடிநீருக்கான கூடுதல் வரியை உடனடியாக கைவிட வேண்டும். புதுவையில் தனியார் மூலம் நடத்தப்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

Similar News