செய்திகள்

மதுரை தொழிலதிபர்களை தாக்கி ரூ.30 லட்சம் புதிய நோட்டுகளை பறித்து சென்ற கும்பல்

Published On 2016-12-16 10:49 IST   |   Update On 2016-12-16 10:49:00 IST
மதுரை தொழிலதிபர்களை தாக்கி ரூ.30 லட்சம் புதிய நோட்டுகளை பறித்து சென்ற கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

சிவகங்கை:

மதுரையை சேர்ந்த தொழிலதிபர்கள் முகம்மது ரபி, முஸ்ரக் ரகுமான். இவர்கள் மதுரையில் செல்போன் கடை நடத்தி வருகிறார்கள். 2 பேரும் நேற்று இரவு காரில் ரூ.30 லட்சம் புதிய நோட்டுகளை எடுத்து கொண்டு சிவகங்கை பகுதிக்கு சென்றனர்.

நள்ளிரவு 11 மணி அளவில் இளையான்கடி செல்லும் வழியில் எதிரே 2 கார்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் இவர்கள் பயணம் செய்த காரை வழிமறித்து நிறுத்தியது. அவர்கள் 10 பேரும் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் முகமது ரபி, முஸ்ரக் ரகுமான் ஆகிய 2 பேரையும் தாக்கி அவர்கள் வைத்திருந்த ரூ.30 லட்சம் புதிய நோட்டுகளை பறித்துக்கொண்டு காரில் தப்பி விட்டனர்.

இதுகுறித்து இளையான்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. சிவகங்கை டி.எஸ்.பி. மங்களேசுவரன், இன்ஸ்பெக்டர் கண்ணதாசன், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

ரூ.30 லட்சம் பணத்தை பறி கொடுத்த மதுரை தொழில் அதிபர்களுக்கு புதிய நோட்டுகள் எப்படி கிடைத்தது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கருப்பு பணத்தை மாற்றும் முயற்சியில் இந்த கொள்ளை சம்பவம் நடந்ததா? என்பது குறித்து விசாரணை நடக் கிறது.

இந்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News