செய்திகள்

திருப்பத்தூர் அருகே தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்திய 2 பேர் கைது

Published On 2016-12-14 11:38 IST   |   Update On 2016-12-14 11:38:00 IST
திருப்பத்தூர் அருகே தடையை மீறி மஞ்சு விரட்டு நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர்:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலத்தில் “வாட்ஸ் அப்” மூலம் மஞ்சு விரட்டு நடப்பதாக தகவல் பரப்பப்பட்டது. இதை தொடர்ந்து அப்பகுதியில் மாடுகளுடன் ஏராளமானோர் குவிந்தனர்.மாடுபிடி வீரர்களும் வந்திருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோஷ்டியூர் போலீசார், பட்டமங்கலம் பகுதியில் மாடுகளை அவிழ்த்து விடாமல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். எனினும் பலன் இல்லை.

போலீசாரின் தடுப்பு நடவடிக்கைகளையும் மீறி ஆங்காங்கே ஒரு சில மாடுகள் அவிழ்த்து விடப்பட்டு தடையை மீறி மஞ்சு விரட்டு நடந்தது.

இதேபோல பக்கத்து கிராமங்களான வெளியாரி, கீழப்பட்டமங்கலம், மேலப்பட்டமங்கலம் பகுதிகளில் உள்ள வயல்வெளிகளில் மஞ்சுவிரட்டு நடந்தது.

இந்த நிலையில் திருக்கோஷ்டியூர் போலீசார் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்த முயன்றதாக வெளியாரியை சேர்ந்த 17 வயது வாலிபர் மற்றும் பொன்னாங்குடியை சேர்ந்த மாயழகு(37) ஆகியோரை கைது செய்தனர்.

Similar News