செய்திகள்
வேதாரண்யம் அருகே கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
வேதாரண்யம் அருகே கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம் செட்டிப்புலம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (45). இவருக்கும், அதே ஊரே சேர்ந்த குப்புசாமி மகன் பரஞ்சோதி (31) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் பரஞ்சோதியின் அண்ணன் மனைவி கலைமணியிடம், தமிழ்செல்வன் பேசி கொண்டிருந்தாராம். இதைப்பார்த்த பரஞ்சோதி தமிழ்செல்வனை தரக்குறைவாக பேசி அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தமிழ்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து பரஞ்சோதியை கைது செய்தனர்.
இதேபோல பரஞ்சோதியை தமிழ்செல்வன் அவதூறாக பேசி மரக்கட்டையை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பரஞ்சோதி கொடுத்த புகாரின் பேரிலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழ்செல்வனை கைது செய்தனர்.