செய்திகள்

வேதாரண்யம் அருகே காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

Published On 2016-12-10 22:15 IST   |   Update On 2016-12-10 22:16:00 IST
வேதாரண்யம் அருகே 19 மாதமாக திருமணத்தை மறைத்த காதல் ஜோடி போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா, மறைஞாயநல்லூரைச் சேர்ந்த ராமசாமி, மகன் மேகநாதன் (வயது 25) எம்.எஸ்.சி பட்டதாரி. தோப்புத்துறை திரவுபதையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் மகள் ரேவதி (24) எம்.காம் பட்டதாரி. இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் 12.3.15 ஆண்டு திருக்குவளை சார்பதிவாளர் அலுவலகத்தில் மேகநாதனும் ரேவதியும் பதிவுத்திருமணம் செய்து கொண்டனர். பின்பு “அலைபாயுதே” சினிமா படத்தில் வருவது போல் கடந்த 19 மாதமாக அவரவர் வீட்டில் பெற்றோருக்கு பயந்து வாழ்ந்து வந்தனர்.

கடந்த வாரம் மேகநாதனை மாப்பிள்ளை பார்க்க வந்துள்ளனர். இதனை அறிந்த ரேவதி தனது காதலனை கைப்பிடிக்க கடந்த 5-ம் தேதி ஆயக்காரன்புலத்திற்கு காரை எடுத்துக்கொண்டு வரச்சொல்லிவிட்டு பின்பு தனது தாய் மணிமேகலையை தோப்புத்துறையில் இருந்து ஆயக்காரன்புலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

பஸ்சில் இருந்து இறங்கியவுடன் ரேவதி தாயிடம் தோழியை பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு அருகில் காரில் தயாராக காத்திருந்த காதலனுடன் சென்று விட்டார். வெகுநேரமாகியும் ரேவதி வராததால் மணிமேகலை தனது கணவர் நாகராஜிற்கு தகவல் தெரிவித்து பல இடங்களில் தேடிப்பார்த்தனர்.

இந்நிலையில் நேற்று காலை வாய்மேடு போலீசில் ரேவதியை காணவில்லை என்று தந்தை நாகராஜ் புகார் செய்தார். இதுபற்றி பொறுப்பு இன்ஸ்பெக்டர் அருணாசலம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இந்தநிலையில் காதல் ஜோடி வாய்மேடு போலீசில் நேற்று தஞ்சம் அடைந்தனர். அவர்கள் தங்களுக்கு ஏற்கனவே பதிவுத்திருமணம் நடைபெற்று விட்ட சான்றிதழை காண்பித்தனர். அவர்களை போலீசார் வேதாரண்யம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்பு இருவருக்கும் 18 வயதிற்கு மேல் ஆகிவிட்ட நிலையில் நீதிபதி விசாரணைக்கு பின் வீட்டிற்கு தெரியாமல் பதிவுத்திருமணம் செய்து வாழ்ந்து வந்த இருவரும் ஒன்றாக வாழ்வது என முடிவெடுத்தனர். இதையடுத்து ரேவதியை தனது வீட்டிற்கு மேகநாதன் அழைத்து சென்றார்.

Similar News