செய்திகள்

திருப்புவனம் அருகே டாஸ்மாக் விற்பனையாளர்களிடம் கத்திமுனையில் வழிப்பறி

Published On 2016-12-10 16:31 IST   |   Update On 2016-12-10 16:32:00 IST
திருப்புவனம் அருகே டாஸ்மாக் விற்பனையாளர்களிடம் 4 பேர் கத்திமுனையில் பணம் மற்றும் செல்போன்களை பறித்து சென்றனர்.

திருப்புவனம்:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள புலியூரில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு கீழடியை சேர்ந்த முத்துகிருஷ்ணன், மணலூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் ஆகியோர் விற்பனையாளர்களாக உள்ளனர்.

இவர்கள் நேற்று இரவு விற்பனை முடிந்ததும் கடையை அடைத்தனர். பின்னர் அவர்கள் வீட்டிற்கு நடந்து சென்றனர்.

அப்போது அங்கு 4 பேர் இருசக்கர வாகனத்தில் வந்தனர். அவர்கள், கத்தி மற்றும் அரிவாளை காட்டி மிரட்டி விற்பனையாளர்களிடம் இருந்த ரூ.4 ஆயிரத்து 500 மற்றும் 2 செல்போன்களை பறித்தனர். இந்த சம்பவத்தின் போது முத்துக்கிருஷ்ணன் மற்றும் பாலசுப்பிரமணியன் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது.

இதில் காயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து திருப்புவனம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சரவணபோஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை தேடி வருகிறார்கள்.

Similar News