செய்திகள்

நாகையில் 2-வது நாளாக கடைகள் அடைப்பு: பஸ்கள் ஓடவில்லை

Published On 2016-12-07 11:37 GMT   |   Update On 2016-12-07 11:37 GMT
ஜெயலலிதா மரணம் அடைந்ததையொட்டி நாகையில் பல்வேறு இடங்களில் நேற்று 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் ஓடவில்லை.
நாகப்பட்டினம்:

ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என செய்தி வெளியானதைதொடர்ந்து நாகை மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா மரணம் அடைந்தார். அதனைத்தொடர்ந்து நேற்று 2-வது நாளாக நாகையில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. அதேபோல பெட்ரோல் விற்பனை நிலையங்களும் அடைக்கப்பட்டன. பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை.

நாகையை அடுத்த கல்லார் கிராமத்தில் மீனவ பெண்கள் ஜெயலலிதாவின் உருவப்படத்தை வைத்து ஒப்பாரி வைத்து அழுதனர். அதேபோல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் (நாகை கிளை) சார்பில் சங்க கட்டிடம் முன்பு ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் அந்துவன்சேரல் தலைமையில் சங்கத்தினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் மாவட்ட செயலாளர் அன்பழகன், ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜோதிமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாகையில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை மாவட்ட கிளை சார்பில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோல நாகை மற்றும் நாகூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் ராமலிங்கம், சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் நவுசாத், நாகூர் நகர தலைவர் அப்துல்காதர், விவசாய அணியை சேர்ந்த குபேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜெயலலிதாவின் மறைவையொட்டி நேற்று வேளாங்கண்ணிக்கு சுற்றுலா பயணிகள் யாரும் வரவில்லை. இதனால் எப்போதும் கூட்டமாக காணப்படும் வேளாங்கண்ணி பேராலயம், கடற்கரை ஆகிய பகுதிகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன. இங்குள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அதேபோல் கீழ்வேளூர், தலைஞாயிறு, தாணிக்கோட்டகம், ஆயக்காரன்புலம், மேலப்பிடாகை, கீழையூர், வாய்மேடு, திருமருகல், திட்டச்சேரி, நாகூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

Similar News