செய்திகள்

மைனர் பெண் திருமணம் தடுத்து நிறுத்தம்: அதிகாரிகள் நடவடிக்கை

Published On 2016-12-04 15:51 IST   |   Update On 2016-12-04 15:51:00 IST
ஈரோடு அருகே இன்று நடக்க இருந்த மைனர் பெண் திருமணம் அதிகாரிகள் நடவடிக்கையால் தடுத்து நிறுத்தப்பட்டது.
ஈரோடு:

ஈரோடு, ரங்கம்பாளையம் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மகள் மகள் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். இவருக்கு 17 வயது தான் ஆகிறது.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பூமாலை(29) என்னும் தொழிலாளிக்கு காளியப்பன் தனது மகளை திருமணம் செய்ய முடிவெடுத்து நிச்சயதார்த்தமும் நடந்தது.

இன்று கொடுமுடி கோவிலில் திருமணம் நடத்த இருவீட்டு பெற்றோர்களும் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

இது குறித்து ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. ஈரோடு சமூக நலவிரிவு அலுவலர் வல்லவி ராணி தலைமையில் அதிகாரிகள் இரு வீட்டு பெற்றோர்களை அழைத்து பேசினார்கள்.

அப்போது மைனர் பெண்ணை திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும் என்று எடுத்து கூறினர். மீறி திருமணம் செய்தால் கைது செய்ய சட்டத்தில் வழிவகை உண்டு என்று எச்சரித்தனர்.

இதனை ஏற்று இருவீட்டு பெற்றோர்களும் திருமணத்தை நிறுத்தி விட்டனர். இதனால் இருவீட்டு உறவினர்களும் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினார்கள்.

Similar News