செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை
ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்றும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. வனப்பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.
ஈரோடு:
நாடா புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வானம் மூடியே மேக கூட்டத்துடன் காணப்பட்டது. பனி கொட்டியதால் குளிர் நிலவியது.
இந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு மேல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. இதேபோல் மாலை மற்றும் இரவு நேரத்திலும் சாரல் மழை பெய்தது.
மொடக்குறிச்சி, அரச்சலூர், சிவகிரி, சென்னிமலை பகுதியில் மட்டும் மழை கொஞ்சம் வேகமாக பெய்தது. இதனால் அப்பகுதிகளில் ரோட்டில் தண்ணீர் தேங்கி நின்றது.
இந்த மழையையொட்டி நேற்று இரவு கடும் குளிர் வாட்டியது. இரவில் வெளியே நடமாட முடியாமல் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.
இன்றும் ஈரோடு மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. வனப்பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.