செய்திகள்

தஞ்சையில் அனுமதியின்றி பேனர் வைத்த காங்கிரசார் மீது வழக்கு

Published On 2016-11-28 18:09 IST   |   Update On 2016-11-28 18:09:00 IST
தஞ்சையில் காங்கிரஸ் மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடந்தது அந்த கூட்டத்துக்கு அனுமதியின்றி கொடி, பிளக்ஸ் வைத்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் தஞ்சையில் நேற்று முன்தினம் நடந்தது.

கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உள்பட மாநில, மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதையொட்டி தஞ்சை மேலவஸ்தாசாவடி, நாஞ்சிக்கோட்டை சாலை, காந்தி சாலை, மேரீஸ்கார்னர், ராமநாதன்ரவுண்டானா உள்பட பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சி கொடி கட்டப்பட்டு இருந்தது. மேலும் வரவேற்பு பேனர்களும் கட்டப்பட்டு இருந்தன.

இதில் தஞ்சை மேலவஸ்தாசாவடி, நாஞ்சிக்கோட்டை சாலை ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி கட்சி கொடிகளும், வரவேற்பு பேனர்களும் கட்டப்பட்டிருந்தன. இது தொடர்பாக தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்திலும், தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்திலும் தலா ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News