செய்திகள்

தேவகோட்டையில் ஓய்வு பெற்ற தாசில்தார் மனைவியுடன் வெட்டிக் கொலை

Published On 2016-11-26 18:03 GMT   |   Update On 2016-11-26 18:03 GMT
தேவகோட்டையில் ஓய்வு பெற்ற தாசில்தார் மனைவியுடன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவர்களுடைய மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தேவகோட்டை:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகரில் வசித்து வந்தவர் மகாலிங்கம் (வயது 75). ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மனைவி சுசீலா (65) ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்களுக்கு சந்தானம் என்ற ராஜா (45) என்ற மகனும், உமா, சாந்தி என்ற மகள்களும் உண்டு. 3 பேருக்கும் திருமணம் ஆகி விட்டது. மகாலிங்கத்துக்கு வள்ளியம்மாள் என்ற 2–வது மனைவியும் உண்டு. இவருக்கு குழந்தை இல்லை.

மகாலிங்கம் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். மகாலிங்கத்தின் மகள் உமா அருகில் உள்ள அரியக்குடி அரசுப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று பணி முடிந்து தனது தந்தையை பார்ப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்றார்.

அப்போது மகாலிங்கமும், அவருடைய மனைவி சுசீலாவும் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உமா உடனடியாக தேவகோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

கொலை நடந்த போது மகாலிங்கத்தின் 2–வது மனைவி வள்ளியம்மாள் வீட்டின் மற்றொரு அறையில் இருந்துள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் கொலை நடந்தது அவருக்கு தெரியவில்லை.

போலீஸ் விசாரணையில், மகாலிங்கத்துக்கும், அவருடைய மகன் சந்தானத்துக்கும் சுமூக உறவு இல்லாமல் அவர்களிடையே தகராறு இருந்தது தெரிய வந்தது. மகாலிங்கம் நல்ல வசதியாக இருந்தபோதும் தனது மகனுக்கு பண உதவி ஏதும் செய்யாமல் ஒதுக்கி வைத்திருந்தாராம். சந்தானம் ஏழ்மை நிலையில் கஷ்டப்பட்டு வந்துள்ளார்.

இதனிடையே கடந்த சில தினங்களாக மகாலிங்கத்திடம் ஒத்திக்கு வீடு பார்க்க சந்தானம் பணம் கேட்டு வந்துள்ளார். ஆனால் அவர் கொடுக்க வில்லையாம்.

இது தொடர்பாக தந்தை– மகன் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. எனவே இக்கொலையில் தொடர்பு இருக்குமோ என்ற அடிப்படையில் போலீசார் சந்தானத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News