செய்திகள்

நிதி நிறுவனத்திடம் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டு கொடுத்த ஆட்டோ டிரைவர் கைது

Published On 2016-11-26 16:20 GMT   |   Update On 2016-11-26 16:20 GMT
திருப்பூர் நிதி நிறுவனத்தில் கலர் ஜெராக்ஸ் எடுத்து ரூ.2 ஆயிரத்தை கொடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்:

திருப்பூர் அனுப்பர் பாளையம் அருகே உள்ள கணக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் சந்திரன் (41). ஆட்டோ டிரைவர்.

இவர் தனது மகனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க திருப்பூர் - அவினாசி ரோட்டில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கினார். மாதாமாதம் தவணை முறையில் அந்த கடனை அவர் திருப்பிச் செலுத்தி வந்தார்.

சந்திரன் நேற்று மாலை தனியார் நிதி நிறுவனத்திற்கு தவணை பணம் செலுத்தச் சென்றார். அப்போது தன்னிடம் இருந்த 2 ஆயிரம் ரூபாய் புதிய நோட்டை கொடுத்தார்.

பணத்தைப் பெற்ற நிதி நிறுவன ஊழியருக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து பரிசோதனை செய்து பார்த்தபோது ஆட்டோ டிரைவர் சந்திரன் கொடுத்த 2 ஆயிரம் நோட்டு கள்ளநோட்டு என்பது தெரியவந்தது.

இது குறித்து நிதி நிறுவனத்தினர் அனுப்பர் பாளையம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து ஆட்டோ டிரைவர் சந்திரனை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு புதிய நோட்டு என்பதால் யாருக்கும் சந்தேகம் வராது என்று கருதி அந்த நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து கொடுத்ததாக தெரிவித்தார்.

மேலும் ஜெராக்ஸ் கடைக்காரர் தன்னிடம் எதற்காக பணத்தை கலர் ஜெராக்ஸ் எடுக்க சொல்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு நான் தேவைப்படுகிறது என்று கூறி கலர் ஜெராக்ஸ் பெற்று வந்து இந்த நிதி நிறுவனத்தில் மாதத்தவணையாக அந்த பணத்தை செலுத்தினேன் என்றார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Similar News