செய்திகள்

காதலனை கைப்பிடிக்க விமானத்தில் பறந்து வந்த இளம்பெண்: பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

Published On 2016-11-23 16:12 IST   |   Update On 2016-11-23 16:12:00 IST
பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலனை கைப்பிடிக்க வெளிநாட்டில் இருந்து வந்த இளம்பெண் பாதுகாப்பு கேட்டு ஈரோடு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

ஈரோடு:

ஈரோடு ரெயில்வே காலனியை சேர்ந்தவர் பெதர் ஹசில் (வயது 24).

இவர் கடந்த 2014-ம் ஆண்டு மாலத்தீவு சென்றார். அங்குள்ள அட்டு என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அவர் வேலை பார்த்து வந்தார்.

இதே நிறுவனத்தில் மாலத்தீவை சேர்ந்த ஈனாஸ் அலி (21) என்பவர் கேஷியராக வேலை பார்த்து வந்தார்.

அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து மனம் விட்டு பேசி தங்களது காதலை வளர்த்து கொண்டனர்.

எவ்வளவு நாள் காதலர்களாகவே இருப்பது. திருமணம் செய்து கொண்டு சந்தோச‌ஷமாக குடும்பம் நடத்தலாம் என்று நினைத்த அவர்கள் இது பற்றி தங்களது பெற்றோர்களிடம் கூறினர்.

ஆனால் பெதர் ஹசில்-ஈனாஸ் அலி ஆகியோரின் காதலுக்கு அவர்களது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் திருமணம் செய்வதற்கும் அவர்கள் சம்மதிக்கவில்லை.

இந்த நிலையில் பெதர் ஹசல் கடந்த ஆகஸ்டு மாதம் ஈரோடு வந்து விட்டார்.

இதனால் ஈனாஸ் அலி தனது காதலனை பார்ப்பதற்காக விமானம் மூலம் ஈரோடு வந்தார்.

இதன் பிறகு காதலர்கள் இருவரும் ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

Similar News