பெருந்துறை தபால்நிலையத்தில் பணம் எடுக்க 5மணி நேரம் காத்திருக்கும் மக்கள்
பெருந்துறை:
ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தது முதல் நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. பொதுமக்கள் வேலைக்குப் போகிறார்களோ..இல்லையோ.. தற்போது பாங்கிகளுக்கும் ஏ.டி.எம்.களுக்கும் செல்வது வாடிக்கையாகிவிட்டது.
பெருந்துறையில் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள இந்தியன் பாங்கி சவுத் இண்டியன் வங்கி, கனரா வங்கி பழைய பஸ் நிலையம் ரோட்டில் உள்ள கனரா வங்கி மற்றும் ஐ.ஓ.பி. பாங்கி, ஸ்டேட் பாங்கி, பவானி ரோட்டில் உள்ள இந்தியன் பாங்கி உள்பட அனைத்து வங்கிகளில் இன்று 10-வது நாளாக மக்கள் கூட்டம் கூடி உள்ளது.
இவர்கள் பாங்கி முன் நீண்ட வரிசையில் காத்திருந்து பழைய ரூபாயை கொடுத்து மாற்றிக்கொண்டு செல்கிறார்கள். குறிப்பிட்ட அளவுக்கு பணம் கொடுத்ததும் பலருக்கு கொடுக்க பணம் இல்லாமல் போய் விடுகிறது. இதனால் இவர்கள் ஏமாற்றத்துடன் செல்வதை பார்க்க முடிகிறது. ஏ.டி.எம்.களிலும் ஒரு மணி நேரத்தில் பணம் தீர்ந்து போய்விடுகிறது.
இதேபோல் பெருந்துறை தபால் நிலையத்திலும் பழைய நோட்டுகளை மாற்ற கட்டுக்கடங்காத கூட்டம் அலை மோதிய வண்ணம் உள்ளது.
தபால் அலுவலகத்துக்கு காலை 7 மணிக்கு வந்தவர்கள் கிட்டத்தட்ட 5 மணி நேரம் காத்திருந்து மதியம் 1 மணிக்கு பணத்தை மாற்றி செல்லும் பரிதாப நிலை உள்ளது.