செய்திகள்

மதுக்கரை அருகே யானை தாக்கி முதியவர் பலி

Published On 2016-11-18 10:24 IST   |   Update On 2016-11-18 10:24:00 IST
மதுக்கரை அருகே யானை தாக்கி முதியவர் பலியான சம்பவத்தையடுத்து, போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை மதுக்கரை வனச்சரகம் புதுப்பதி மலை கிராமத்தை சேர்ந்தவர் கரட்டி (வயது 80).

இவர் வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று ஆடுகளுக்கு இலை பறிக்க காட்டுக்குள் சென்றார். வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் காட்டுக்குள் சென்று தேடிப் பார்த்தனர். எனினும் அவர் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் சோலக்கரை வனப்பகுதியில் கரட்டி இன்று காலை அந்த பகுதியில் காட்டுக்குள் யானை தாக்கி படுகாயமடைந்து இறந்த நிலையில் கிடந்தார். அவரை யானை புரட்டிப் போட்டதற்கான தடயங்கள் மற்றும் உதைத்ததற்கான தடயங்கள் இருந்தன.

இதுகுறித்து கே.ஜி.சாவடி போலீசாருக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News