செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதுவோர் விவரத்தை சரிபார்க்க பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

Published On 2016-11-18 08:20 IST   |   Update On 2016-11-18 08:20:00 IST
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதுவோரின் விவரங்களை சரிபார்க்க வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.
சென்னை:

இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை விரைவில் சேகரித்து சரிசெய்யவேண்டும். மாணவர்கள் பிறந்த தேதி, பெற்றோர் பெயர், சாதி, ஆதார் எண், புகைப்படம் உள்ளிட்ட அனைத்து வகைகளும் அந்த பட்டியலில் இடம்பெற வேண்டும்.

இந்த விவரங்கள் அனைத்தும் வருகை பதிவேட்டில் உள்ளபடி சரியாக இருக்க வேண்டும். இதனை கல்வி தகவல் மேலாண்மை முறையில் ஏற்கனவே உள்ளடு செய்த மாணவர்களிடம், அவர்கள் கொடுத்த விவரங்கள் சரியாக உள்ளனவா? என வகுப்பு ஆசிரியர்கள் சரிபார்க்கவேண்டும். இதில் எந்தவித தவறும் இருக்கக்கூடாது.

அனைத்தையும் வகுப்பு ஆசிரியர் சரிபார்த்த பின்னர் தலைமை ஆசிரியர் கையெழுத்திட வேண்டும். பிறகு அதை மாவட்ட கல்வி அதிகாரிகள் பெற்று கையெழுத்திட வேண்டும். இந்த பணியை மாவட்ட கல்வி அதிகாரிகளும், முதன்மை கல்வி அதிகாரிகளும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த தகவலை சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் காணொலி காட்சி மூலம் முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் நேற்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சி அனைவருக்கும் கல்வி திட்ட மாநில இயக்குனர் பூஜா குல்கர்னி தலைமையில் நடைபெற்றது. அப்போது இயக்குனர்கள் க.அறிவொளி, ரெ.இளங்கோவன், வி.சி.ராமேஸ்வர முருகன், கருப்பசாமி, பழனிச்சாமி மற்றும் இணை இயக்குனர்கள் தங்கள் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பேசினர்.

Similar News