செய்திகள்

பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

Published On 2016-11-16 12:32 IST   |   Update On 2016-11-16 12:32:00 IST
பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தின் நீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணை 120 அடியை கொண்டது. இதில் 15 அடி வெறும் சேறும்-சகதியும் கொண்டது ஆகும்.

கடந்த ஆண்டு அணையின் நீர் மட்டம் 70 அடிக்கு மேல் இருந்தது. இதனால் பாசனத்துக்காக வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டது. விவசாயிகளும் பயன்பெற்றனர். பயிர்களை காப்பாற்றினர்.

ஆனால் இந்த ஆண்டு மழை பெய்யாததால் அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து உள்ளது. இதனால் வாய்க்கால்களில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறக்க முடியவில்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.

பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் 44.10 அடியாக இருந்தது.

நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 291 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. நேற்று 303 கன அடி தண்ணீர் வந்தது.

இன்று (புதன்கிழமை) வினாடிக்கு 770 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று தண்ணீர் வரத்து லேசாக அதிகரித்து உள்ளது. குடிநீருக்கும் 205 கன அடி திறந்து விடப்படுகிறது.

நீலகிரி மலையில் உள்ள பில்லூர் அணையில் மின்சாரம் தயாரிக்க தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் இந்த தண்ணீர் அணைக்கு வந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் குறைந்த அளவு காற்றழுத்த மண்டலத்தால் ஊட்டி மலை பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.

அதன்படி ஊட்டி மலைப்பகுதிகளில் மழை பெய்தால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும் நீர்மட்டமும் உயர வாய்ப்பு உள்ளது.

Similar News