செய்திகள்

பட்டா மனைகளை பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை நீங்குமா?: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

Published On 2016-11-15 08:15 GMT   |   Update On 2016-11-15 08:15 GMT
தமிழகம் முழுவதும் பட்டா மனைகளை வீட்டு மனைகளாக பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையை எதிர்த்த வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நாளை நடைபெறுகிறது.
சென்னை:

தமிழகம் முழுவதும் பட்டா மனைகளை வீட்டு மனைகளாக பதிவு செய்ய கடந்த செப்டம்பர் மாதம் 9-ந் தேதி சென்னை ஐகோர்ட்டு திடீரென தடைவிதித்தது. இதனால் ரியல் எஸ்டேட் தொழில் முடங்கியது. அத்தொழிலில் ஈடுபட்டவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்,

வீட்டுமனைகளை பொறுத்தவரையில் அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைகள், பட்டாமனைகள் என 2 பிரிவாக உள்ளன.

பட்டா வீட்டுமனைகளே அதிகமாக உள்ளன என்று கூறுகிறார்கள் ரியல் எஸ்டேட் அதிபர்கள். பட்டாமனைகளை விட அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகள் என்றால் அதன் விலை அதிகமாகவே இருக்கும். இதனால் ஏழை- நடுத்தர மக்களில் பெரும்பாலானோர், பட்டாமனைகளை வாங்கி, அதில் கஷ்டப்பட்டு ஒரு வீட்டை கட்டி குடியேறி விடலாம் என்று நினைப்பார்கள்.

இது போன்று பட்டா மனைகளையே பலரும் வாங்கிப்போட்டுள்ளனர்.

இந்நிலையில் ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து பட்டா மனைகளாக உள்ள வீட்டுமனைகள் தமிழகம் முழுவதும் பதிவு செய்யப்படாமல் கடந்த 3 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், ரியல் எஸ்டேட் அதிபர்கள், புரோக்கர்கள் ஆகியோருடன் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து ஐகோர்ட்டின் இந்த உத்தரவை நீக்க கோரி, ரியல் எஸ்டேட் அதிபர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். போராட்டங்களையும் அவர்கள் நடத்தி வருகின்றனர். அரசியல் தலைவர்களும், இந்த உத்தரவை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பட்டா மனைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி, சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால். ஐகோர்ட்டு இந்த தடையை நீக்க மறுத்துவிட்டது.

இதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரனை நாளை நடைபெறுகிறது. அப்போது ரியல் எஸ்டேட் தொழில் புரிபவர்கள் சார்பில், தடையை நீக்க கோரிக்கை விடுக்கப்பட உள்ளது. இதனை ஏற்று சுப்ரீம் கோர்ட்டு பட்டா மனைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறும்போது, கடந்த 3 மாதமாக நீடிக்கும் தடையால் கோடிக் கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே இதனை கருத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட்டு இது பற்றி உரிய முடிவு எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.

இதற்கிடையே இந்த கோரிக்கையை வலியுறுத்தி இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலதரகர்கள் நல சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

அந்த அமைப்பின் தலைவர் விருகை வி.என். கண்ணன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் சங்க தலைவர் பொன்குமார், மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம. நாராயணன், ரியல் எஸ்டேட் சங்க செயலாளர் செந்தில் குமார், பொருளாளர் லயன் குமார், மாநில அமைப்பாளர்கள் தேவ.குமார், பந்தல் செல்வம், கே.வி.எஸ். சரவணன், சேலவாயல் சரவணன், முனீர் சையது அலி, பாலசுப்பிரமணியம், தணிகாசலம், பழனி, ஜெகநாதன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இது போன்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்தன.

Similar News