கந்துவட்டிக்கு கடன் கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: கலெக்டர் அறிவிப்பு
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது -
தமிழக அரசு கடும் வட்டி விதிப்பினை தடை செய்யும் நோக்கில், தமிழ்நாடு வரம்பு மிகுந்த வட்டி விதிப்பு தடுப்புச் சட்டம் 2003 கொண்டு வந்தது. இச்சட்டத்தின் கீழ் தின வட்டி, மணி நேர வட்டி, மீட்டர் வட்டி உள்ளிடவைகள் கந்து வட்டி என கணக்கிடப்படும். எனவே, பொதுமக்கள் கடன் பெறுவதற்கு முன்பு கீழ்காணும் விபரங்களை தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பணம் கடன் கொடுப்போர் சட்டத்தின்கீழ் அங்கீகாரம் பெறாத நிதி நிறுவனங்களின் வாக்குறுதிகளான உடனடி கடன் மிக குறைந்த வட்டியில் கடன் ஆகியவற்றை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். மேலும், உரிமம் பெறாத நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற வேண்டாம். கடன் பெறும் போது ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்ற வங்கிகள், வங்கி பரிவர்த்தனை அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் தமிழக அரசிடம் உரிய அனுமதி பெற்றுள்ள நிதி நிறுவனத்திடம் கடன் பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் கீழ் பதிவு செய்யப்படாத வங்கிகள் மற்றும் நிதி நிறுவனத்தினர் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் ரிசர்வ் வங்கியால் நிர்ணயம் செய்யப்பட மாட்டாது. பொதுமக்கள் கடன் பெறும் முன்னர் அதற்கான நிபந்தனைகள் ஒப்பந்தங்கள், வட்டி விகிதம் ஆகியவற்றை பரிசீலனை செய்து ஆண்டுக்கு எவ்வளவு வட்டி என்பதனை கண்டறிந்து அதன் பின்பு கடன் பெறுவது குறித்த முடிவு எடுக்க வேண்டும்.
கந்து வட்டிக்கு கடன் கொடுப்பது சட்டப்படி குற்றமாகும். மீறுபவர்கள் மீது தமிழ்நாடு வரம்பு மிகுந்த வட்டி விதிப்பு தடுப்புச் சட்டம் 2003 கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.