செய்திகள்

மதுரையில் நடமாடும் ஏ.டி.எம். மூலம் பணம் எடுக்க நடவடிக்கை: வங்கிகளில் அலைமோதிய கூட்டம்

Published On 2016-11-12 12:04 GMT   |   Update On 2016-11-12 12:15 GMT
மதுரையில் வாடிக்கையாளர்கள் சிரமத்தை போக்க சில இடங்களில் நடமாடும் ஏ.டி.எம். மூலம் பணம் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் இன்று 3-வது நாளாக கூட்டம் அலைமோதியது.

மதுரை:

மதுரையில் வாடிக்கையாளர்கள் சிரமத்தை போக்க சில இடங்களில் நடமாடும் ஏ.டி.எம். மூலம் பணம் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் இன்று 3-வது நாளாக கூட்டம் அலைமோதியது.

புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. அதற்கு பதிலாக புதிய 500, 2000 ஆகிய புதிய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் பெற்று கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் வங்கிகளுக்கு வாடிக்கையாளர்கள் படை எடுத்தனர். நீண்ட வரிசையில் நின்று பழைய நோட்டுக்களை கொடுத்து விட்டு புதிய ரூபாய் நோட்டுக்களை பெற்றனர்.

மாலை 6 மணி வரை பணம் மாற்றி கொடுக்கப்பட்டாலும், வங்கிக்கு வந்த அனைவருக்கும் கொடுக்கப்படவில்லை. இதனால் நேற்றும் வாடிக்கையாளர்கள் அதிகாலையிலேயே வங்கி முன்பு குவிந்தனர்.

இந்த நிலையில் நேற்று ஏ.டி.எம். மையத்திலும் பணம் எடுக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் மதுரையில் உள்ள நூற்றுக்கணக்கான ஏ.டி.எம். மையங்களில் ஒரு சில வங்கி ஏ.டி.எம்.களில் மட்டுமே பணம் எடுக்க முடிந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் பணம் கிடைத்த ஏ.டி.எம்.மை நோக்கி விரைந்தனர். சுமார் 11.30 மணி வரை பணம் கிடைக்காமல் அவதிப்பட்ட நிலையில் படிப்படியாக ஏ.டி.எம்.கள் செயல்பட தொடங்கின. ஒரு நபரே 2, 3 கார்டுகளுக்கு பணம் எடுத்ததால் விரைவாக பணம் தீர்ந்து மீண்டும் பல ஏ.டி.எம்.களில் பணம் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இன்று 3-வது நாளாக வங்கிகளில் கூட்டம் அலைமோதியது. பணம் செலுத்தும் மிஷினில் வாடிக்கையாளர் தங்களிடம் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால் அதிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

வாடிக்கையாளர்களின் சிரமத்தை போக்கவும், விரைவாக பணம் கிடைக்கவும் சில வங்கிகள் நடமாடும் ஏ.டி.எம். மிஷின்கள் மூலம் பணபட்டுவாடா செய்தது. இதை அறிந்த வாடிக்கையாளர்கள் அங்கும் விரைந்து சென்று பணத்தை எடுத்த வண்ணம் இருந்தனர்.

இது குறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறும் போது, போதிய பணம் உள்ளது. பல இடங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் நடமாடும் ஏ.டி.எம். மூலமும் பணம் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று முதல் நிலைமை சீராகிவிடும் என்று கூறி னார்.

Similar News