செய்திகள்

ஏ.டி.எம்.கள் செயல்படவில்லை: ஈரோடு மக்கள் தவிப்பு

Published On 2016-11-11 17:44 IST   |   Update On 2016-11-11 17:44:00 IST
ஏ.டி.எம். மூலம் இன்று முதல் புதிய 2000 நோட்டுகள் மற்றும் ரூ.50 பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வங்கி ஏ.டி.எம். சென்டர்களிலும் மக்கள் திரண்டனர்.

ஈரோடு:

2 நாட்களுக்கு பிறகு இன்று அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம்.கள் திறக்கப்படும் என்றும், ஏ.டி.எம். மூலம் இன்று முதல் புதிய 2000 நோட்டுகள் மற்றும் ரூ.50 பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, கோபி, பவானி, அந்தியூர், சத்தியமங்கலம், பவானி சாகர், நம்பியூர், கவுந்தபாடி உள்பட மாவட்டத்தின் அனைத்து வங்கி ஏ.டி.எம். சென்டர்களிலும் மக்கள் திரண்டனர்.

ஏ.டி.எம். சென்டர் வழக்கம் போல் இயங்கும் என எண்ணி பலர் காலை 8 மணிக்கெல்லாம் ஏ.டி.எம். முன் குவிந்தனர். இன்னும் பலரோ காலை 6 மணிக் கெல்லாம் வரத்தொடங்கி விட்டார்கள்.

ஆனால் எந்த ஏ.டி.எம். களும் திறக்கப்படவில்லை. காலை 10 மணிக்கு தான் செயல்படும் என்று கூறப்பட்டது. வந்தது வந்தாகி விட்டது இன்றும் 2 மணி நேரம் தானே... காத்திருந்து பணத்தை எடுத்துக் கொண்டு போவோம்...என ஏ.டி.எம். முன் அவர்கள் தவம் கிடக்க தொடங்கினர்.

காலை 10 மணிக்கு மேலும் ஏ.டி.எம். திறக்கப்படாததால் பொதுமக்கள் பணம் எடுக்க தவித்து வருகிறார்கள். மதியத்துக்கு மேல்தான் ஏ.டி.எம். செயல்படும் எனவும் 50 ரூபாய் மட்டுமே கிடைக்கும் எனவும் கூறப்பட்டது.

ஆனால் மதியத்துக்கு மேலேயும் ஏ.டி.எம்.கள் செயல்படவில்லை. ஈரோட்டில் உள்ள அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம். சென்டர்களில் காத்திருந்து... காத்திருந்து மக்கள் ஏமாற்றப்பட்டதுதான் மிச்சம்.

மேலும் நகரில் உள்ள சில ஏ.டி.எம்.களில் பழைய 500 மற்றும் 1000 நோட்டை மக்கள் செலுத்தினர்.

அறிவித்தப்படி ஏ.டி.எம்.கள் இன்று செயல்படாததால் ஈரோட்டில் பொதுமக்கள் இன்று மீண்டும் பாங்கிகளுக்கு படையெடுத்தனர்.

அனைத்து வங்கிகளிலும் செல்லாத நோட்டுகளை கொடுத்து புதிய நோட்டுகளை வாங்க மக்கள் திரண்டதால் இன்றும் பாங்கிகளில் கூட்டம் அலைமோதியது.

மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து 500, 1000 ரூபாய் கொடுத்து அதற்கு பதிலாக 100 மற்றும் புதிய 2000 நோட்டுகளை பெற்றுக் கொண்டு சென்றனர்.

இதேபோல் ஈரோடு தலைமை தபால் நிலையத்திலும் இன்று 2-வது நாளாக மக்கள் திரண்டு ரூ.500, 1000 நோட்டுகளை கொடுத்து 100 ரூபாய்களை பெற்று சென்றனர்.

இதனால் தலைமை தபால் நிலையத்திலும் இன்று கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.

Similar News