செய்திகள்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 44 அடியாக சரிந்தது

Published On 2016-11-08 16:59 IST   |   Update On 2016-11-08 17:00:00 IST
நீர் பிடிப்பு பகுதியில் போதிய மழை பெய்யாததால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிந்ததுள்ளது.
ஈரோடு:

நீர் பிடிப்பு பகுதியில் போதிய மழை பெய்யாததால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் படிபடியாக சரிந்து கொண்டே வருகிறது.

கடந்த மாதம் மத்தியில் 53 அடியாக இருந்த பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசன பகுதிக்கு உயிர் நீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து 15 நாட்கள் வினாடிக்கு 1200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

இதனால் நீர்மட்டம் குறைய தொடங்கியது. இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 44.11 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 95 கன அடி வீதம் மட்டும் தண்ணீர் வருகிறது. குடிநீருக்கு பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 205 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்திருந்தால் கீழ்பவானி வாய்க்காலுக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மழை பெய்யாததால் தண்ணீர் வரத்து இல்லை. இதனால் தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது.

கீழ்பவானி வாய்க்காலின் கிளை மற்றும் கொப்பு வாய்க்கால்களுக்கு 4 நாட்கள் மட்டும் தான் தண்ணீர் வந்தது. தற்போது தண்ணீர் நிறுத்தப்பட்டதால் வயலை உழுது நெல் மற்றும் பயிர்களை விவசாயம் செய்திருந்த விவசாயிகள் வேதனையுடன் உள்ளனர். சில வயல்களில் உழுது மட்டும் போடப்பட்டுள்ளது. இதில் விவசாய பணிகளை மழையை நம்பி தொடரலாமா? அல்லது விட்டு விடலாமா? என்ற குழப்பத்தில்... கவலையில் விவசாயிகள் உள்ளனர்.

Similar News