செய்திகள்

கோயம்பேடு பழமார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: அதிகாரிகளுடன் வியாபாரிகள் மோதல்

Published On 2016-11-01 12:19 IST   |   Update On 2016-11-01 12:19:00 IST
கோயம்பேடு பழமார்க்கெட்டுக்கு இன்று காலை சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் வந்து ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை இடித்து அகற்றினர். இதனை கண்டித்து வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை முற்றுகையிட்டு மோதலில் ஈடுபட்டனர்.
சென்னை:

கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள பழமார்க்கெட்டில் சி.எம்.டி.ஏ அனுமதியில்லாமல் ஏராளமனோர் நடை பாதையில் கடைகள் வைத்திருந்தனர்.

இதனால் மார்க்கெட்டுக்கு வரும் வியாபாரிகள், பொதுமக்கள் அவதியடைந்தனர். கடும் நெரிசலும் ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும்படி வியாபாரிகளுக்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால் கடைகள் அகற்றப்படாமலேயே இருந்தது.

இந்தநிலையில் இன்று காலை சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் பழமார்க்கெட்டுக்கு வந்தனர். அவர்கள் அதிரடியாக ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை இடித்து அகற்றினர்.

இதனை கண்டித்து வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை முற்றுகையிட்டு மோதலில் ஈடுபட்டனர். கடும் வாக்குவாதத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அதிகாரிகள் கூறும் போது ஆக்கிரமிப்பு கடைகள் முழுவதும அகற்றப்படும். தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

மேலும் பாதுகாப்புக்கு நின்ற கோயம்பேடு போலீசார் வியாபாரிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதைதொடர்ந்து வியாபாரிகள் கலைந்து சென்றனர்.

பழமார்க்கெட்டில் இருந்த 50-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் முற்றிலும் அகற்றப்பட்டது.

இன்று மாலைவரை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த வாரம் கோயம்பேடு மார்க்கெட்டில் நடை பாதையில் இருந்த கடைகள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News