செய்திகள்

தமிழகத்தில் 818 இடங்களில் பட்டாசு தீ விபத்து

Published On 2016-10-30 15:05 IST   |   Update On 2016-10-30 15:05:00 IST
தமிழகம் முழுவதும் 818 பட்டாசு தீ விபத்துகள் நடந்துள்ளன.

சென்னை:

தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக இருப்பது பட்டாசு.

பட்டாசு வெடிக்கும் போது ஆண்டு தோறும் தீ விபத்துகளும், சிறு காயங்களும் ஏற்படுவது வழக்கம். பட்டாசு தீ விபத்தை தடுக்க தமிழகம் முழுவதும் தீயணைப்பு படைகள் உஷார் படுத்தப்பட்டன.

சென்னையில் 900 தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 39 தீயணைப்பு நிலையங்கள் தவிர மக்கள் நெருக்கம அதிகமுள்ள வர்த்தக பகுதிகளாக 34 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு அந்த இடங்களிலும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தன.

வெளியூர்களில் இருந்து 200 வீரர்களும், 19 தீயணைப்பு வண்டிகளும் வர வழைக்கப்பட்டு இருந்தன. தீபாவளி பண்டிகையான வெள்ளிக்கிழமை இரவு 12 மணி முதல் சனிக்கிழமை இரவு 12 மணி வரையில் தமிழகம் முழுவதும் 818 பட்டாசு தீ விபத்துகள் நடந்துள்ளன.

சென்னையில் மட்டும் 124 இடங்களில் தீ விபத்துகள் நடந்தன. 28-ந்தேதி நடந்த 44 விபத்துகளில் 2 பேர் தீக்காயம் அடைந்தனர். பிற மாவட்டங்களில் நடந்த 205 தீ விபத்துகளில் ஒருவர் மட்டும் லேசான காயம் அடைந்தார்.

29-ந்தேதி சென்னையில் 121 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டன. மற்ற மாவட்டங்களில் 697 விபத்துக்கள் நடந்துள்ளது.

சென்னையில் ராக்கெட் பட்டாசுகளினால் தீ விபத்து அதிகம் ஏற்பட்டு உள்ளன. இதனால் தென்னை மரம், மாடிகளில் உள்ள குடிசைகள் எரிந்தன. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வந்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் பெரும் விபத்தோ, உயிர் இழப்போ, எதுவும் ஏற்பட வில்லை. 20 குடிசைகள் எரிந்துள்ளன.

பட்டாசு தீ விபத்து கடந்த ஆண்டை விட இந்த வருடம் அதிகம் நடந்துள்ளது. இதற்கு தீபாவளி பண்டிகையின் போது மழை இல்லாமல் போனதே காரணம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட உதவி தீயணைப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-

இந்த ஆண்டு பட்டாசு தீ விபத்து கடந்த ஆண்டுகளை விட அதிகம் நடந்துள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் தீபாவளி தீ விபத்து 84 நடந்துள்ளது. இந்த ஆண்டு 818 விபத்துகள் நடந்து இருக்கின்றன. 2012-ம் ஆண்டு 911 விபத்துகளும், 2013-ல் 301 விபத்துகளும், 2014-ல் 62 தீ விபத்துகளும் பதிவாகி உள்ளன.

தீக்காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த வருடம் மிகக் குறைவாகும்.

கடந்த ஆண்டு பட்டாசு வெடிக்கும்போது காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 339. இந்த ஆண்டு 20 பேர் மட்டுமே தீக்காயம் அடைந்துள்ளனர். 2014-ல் 576 பேரும், 2013-ல் 306 பேரும், 2012-ல் 683 பேரும் தீக்காயம் அடைந்தனர்.

வழக்கமாக தீபாவளி பண்டிகையின்போது மழை பெய்யும். இந்த வருடம் மழை இல்லாததால் தீ விபத்து அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News