பெண்ணாடம் அருகே கோவில் விழாவில் இருதரப்பினர் மோதல்: மாணவர்கள் உள்பட 9 பேர் கைது
பெண்ணாடம்:
பெண்ணாடம் அருகே உள்ள தாழநல்லூர் பெருமாள் கோவிலில் மண்டல பூஜை விழா நேற்று இரவு நடைபெற்றது.
தீவலூர் பகுதியை சேர்ந்த சூரியபிரகாசும்(வயது 18), அவரது நண்பரும் மோட்டார் சைக்கிளில் தாழநல்லூர் பெருமாள் கோவில் அருகே வந்தனர். அப்போது அவர்கள் கூச்சலிட்டபடி சென்றதாக கூறப்படுகிறது. அவர்களை அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி பொன்னுசாமி(40) கண்டித்தார். இதனால் அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
பின்னர் சூரியபிரகாசும், அவரது நண்பரும் கோபத்தில் அங்கிருந்து தீவலூர் சென்றனர். உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்துக் கொண்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் தாழநல்லூர் வந்தனர். கோவிலில் இருந்தவர்களிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதுகுறித்து பெண்ணாடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
இந்த மோதல் தொடர்பாக தீவலூரை சேர்ந்த சூரியபிரகாஷ், கார்த்திக்ராஜ், மேகராஜன், விஜயகாந்த், விஜயசங்கர், விஜயராஜ், ஹரிகிருஷ்ணன், தினேஷ் குமார், விக்னேஸ்வரன் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களில் சூரிய பிரகாஷ் ஐ.டி.ஐ யும், விக்னேஷ்வரன் 10-ம் வகுப் பும் படித்து வருகிறார்கள்.