செய்திகள்

நெய்வேலியில் சுரங்கம் அமைத்து நகைக்கடையில் நடந்த கொள்ளையில் துப்பு துலங்கியது: 50 பேரிடம் அதிரடி விசாரணை

Published On 2016-10-25 17:14 IST   |   Update On 2016-10-25 17:14:00 IST
நெய்வேலியில் சுரங்கம் அமைத்து நகைக்கடையில் நடந்த கொள்ளை தொடர்பாக 50 பேரிடம் போலீசார் அதிரடி விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர்:

நெய்வேலி மந்தாரக்குப்பத்தை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 48). இவர் அந்த பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார்.

கடந்த ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி இரவு இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவில் சில மர்ம மனிதர்கள் அந்த கடையின் பின்பக்கம் சுரங்கம் அமைத்து உள்ளே புகுந்தனர்.

அங்கிருந்த 1½ கிலோ தங்க நகை மற்றும் 22 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இவைகளின் மதிப்பு ரூ.40 லட்சம் ஆகும்.

இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

அதில் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ராஜ், டெல்டா பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்த கொள்ளை தொடர்பாக பழைய குற்றவாளிகள் மற்றும் சுவரில் துளைபோட்டு கடைகளில் கொள்ளையடித்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தவர்கள் ஆகியோர்களிடம் விசாரணை நடத்தினர். கடந்த 2 மாதத்தில் 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த கொள்ளை தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, நகைக்கடையில் நடந்த கொள்ளையில் துப்பு துலங்கியுள்ளது. குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம். நகைகளை மீட்போம் என்றார்.

Similar News