செய்திகள்

பண்ருட்டி அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி ரூ.2 லட்சம் கொள்ளை

Published On 2016-10-22 16:41 IST   |   Update On 2016-10-22 16:41:00 IST
பண்ருட்டி அருகே டாஸ்மாக் ஊழியரை உருட்டு கட்டையால் தாக்கி ரூ.2 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழ்மாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 42). இவர் நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.

தினமும் பழனிவேல் வேலைக்கு மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம். நேற்று இரவு விற்பனை முடிந்து கடையை பூட்டினார். மது விற்பனை செய்த பணம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். இதை அறிந்த 2 வாலிபர்கள் பழனிவேலை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

புதுப்பாளையம் பகுதியில் பழனிவேல் சென்று கொண்டிருந்தார். பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் பழனிவேல் மோட்டார் சைக்கிளை வழிமறித்து உன்னிடம் உள்ள பணத்தை கொடு என்று மிரட்டினர். பழனிவேல் பணத்தை கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் உருட்டுகட்டையால் பழனிவேலை சரமாரியாக தாக்கினர். பழனிவேல் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டார்.

அதற்குள் மர்ம நபர்கள் பழனிவேல் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்தை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பினர். உருட்டுகட்டையால் தாக்கியதில் தலை மற்றும் கையில் பலத்த காயம் அடைந்த பழனிவேலை அக்கம் பக்கத்தினர் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து பழனிவேல் காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்- இன்ஸ்பெக்டர் வனஜா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணம் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News