செய்திகள்

குவைத் சிறையில் இருந்து விடுதலையான 3 மீனவர்கள் இன்று சென்னை திரும்பினர்

Published On 2016-10-16 09:58 GMT   |   Update On 2016-10-16 09:58 GMT
குவைத் சிறையில் இருந்து விடுதலையான 3 பேரும் விமானம் மூலம் இன்று சென்னை திரும்பினர்.

ஆலந்தூர்:

நாகர்கோவில் மற்றும் கேரளாவை சேர்ந்த 11 பேர் கடந்த 2015-ம் ஆண்டு குவைத்தை சேர்ந்த நிறுவனத்துக்காக மீன்பிடிக்க சென்றனர். சென்னையை சேர்ந்த ஏஜெண்டு மூலம் அவர்கள் குவைத் சென்றனர்.

குவைத் சென்றதும் அவர்களின் பாஸ்போர்ட்டுகளை அந்த நிறுவனம் வாங்கிக் கொண்டது. அதன்பிறகு மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு 4 மாதமாக சம்பளம் வழங்கவில்லை.

இதனால் அவர்கள் வேலையில் இருந்து நின்று விட்டனர். இந்தியா திரும்ப முடிவு செய்த மீனவர்கள் குவைத் நிறுவனத்தினரிடம் தங்களின் பாஸ்போர்ட்டுகளை கேட்டனர்.

ஆனால் அவர்கள் பாஸ்போர்ட்டுக்கு ரூ.1 லட்சம் பணம் தந்தால்தான் திருப்பி தருவோம் என்று கூறி விட்டனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் 6 மீனவர்கள் தலா ரூ.1 லட்சம் பணத்தை கொடுத்து பாஸ்போர்ட்டை பெற்று தமிழகம் திரும்பி விட்டனர். மீதமுள்ள 5 பேரும் குவைத்தில் தவித்தனர்.

பின்னர் அவர்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தின் உதவியை நாடினர். அவர்கள் சில மாதம் மட்டும் உணவு வழங்கி பராமரித்தனர். மேலும் இந்தியா செல்ல விமான டிக்கெட்டுக்கு வேண்டுமானால் ஏற்பாடு செய்வதாக தூதரக அதிகாரிகள் கூறினர்.

ஆனால் குவைத் நிறுவனத்திடம் இருந்து பாஸ்போர்ட்டை அவர்களால் வாங்கி கொடுக்க முடியவில்லை. பாஸ்போர்ட் இல்லாமல் சுற்றி திரிந்த மீனவர்கள் அங்குள்ள போலீசாரின் உதவியை நாடினர்.

பாஸ்போர்ட் இல்லாத குற்றத்துக்காக அவர்கள் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் 1 மாதம் கழித்து 5 பேரும் சிறையில் இருந்து வெளியே வந்தனர். பின்னர் அவர்களில் குளச்சலை சேர்ந்த மீனவர்கள் ஜான்சீம்ஸ், சிபின், கேரளாவை சேர்ந்த அனிஷ் ஆகிய 3 பேரும் அங்குள்ள நண்பர்கள் மூலம் உறவினர்களை தொடர்பு கொண்டு பணம் வாங்கி குவைத் நிறுவனத்திடம் இருந்து பாஸ்போர்ட்டை பெற்றனர்.

பின்னர் அவர்கள் 3 பேரும் விமானம் மூலம் இன்று சென்னை திரும்பினர். பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

குவைத்தில் உள்ள நிறுவனத்தினர் எங்களுக்கு 4 மாதமாக சம்பளம் தர வில்லை. இதனால் நாங்கள் வேலையில் இருந்து நின்று விட்டோம். அதன்பிறகு உணவுக்கு வழியில்லாமல் தவித்தோம். ஆதரவு இன்றி சுற்றித்திரிந்தோம்.

இந்திய தூதரக அதிகாரிகள் சில மாதங்கள் மட்டுமே எங்களுக்கு உதவி செய்தனர். ஒரு வழியாக உறவினர்களின்உதவியால் தமிழகம் திரும்பி விட்டோம். இன்னும் 2 மீனவர்கள் குவைத்தில் தவிக்கிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Similar News