செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம்: பிரதமர் மோடிக்கு நாராயணசாமி கண்டனம்

Published On 2016-10-15 09:16 GMT   |   Update On 2016-10-15 09:16 GMT
காவிரி பிரச்சினையில் பிரதமர் தலையிடாவிட்டால் ஜனாதிபதியை சந்தித்து தலையிடுமாறு கோரிக்கை வைப்பேன் என்று நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறினார்.
ஆலந்தூர்:

பெங்களூர் சென்ற புதுவை முதல்வர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

காவிரி நதிநீர் பிரச்சினையில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட வேண்டும். உச்சநீதிமன்றம் தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்கவில்லை. வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் தர வேண்டும். அதை கூட முழுமையாக தர வில்லை. கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தை அவமதித்து இருக்கிறது.

காவிரி பிரச்சினையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டார்கள். ஆனால் பிரதமர் மோடியோ நேரம் ஒதுக்குவதற்கு காலம் தாழ்த்தி அ.தி.மு.க. எம்.பி.க்களை உதாசீனம் செய்து இருக்கிறார்.

காவிரி பிரச்சினையில் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்தபோது பிரதமர் மன்மோகன்சிங் தமிழக, கர்நாடக, புதுச்சேரி முதல்-அமைச்சர்களை கூட்டி தீர்வு கண்டார்.

ஆனால் தற்போதைய பிரதமர் மோடி மவுனம் சாதிக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைய பிரதமர் காலம் தாழ்த்துவதற்கு கர்நாடகாவில் பா.ஜனதா எம்.பி.க்களின் அழுத்தம்தான் காரணம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைய மத்திய அரசுக்கு எந்தவித ஆட்சேபனையும் இருக்க கூடாது.

மத்திய அரசு ஆணையத்தை அமைத்தால் தமிழகம், புதுவைக்கு தண்ணீர் வர இடையூறாக இருக்காது.

வருகிற 17-ந்தேதி அல்லது 18-ந்தேதி டெல்லி செல்ல இருக்கிறேன். காவிரி பிரச்சினையில் பிரதமர் தலையிடாவிட்டால் ஜனாதிபதியை சந்தித்து தலையிடுமாறு கோரிக்கை வைப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News