செய்திகள்

விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம்: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தல்

Published On 2016-10-03 23:09 IST   |   Update On 2016-10-03 23:09:00 IST
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தி திருமானூர் அருகே விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தி காவிரியில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய உரிய தண்ணீரை மத்திய அரசு உடனே பெற்று தர வேண்டும் என்பதை வலியுறுத்தியும், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத கர்நாடக அரசை கண்டித்தும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற, விவசாயம் தழைத்தோங்க காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய தண்ணீர் திறக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள விரகாலூரில் மக்கள் சேவை இயக்கம், தமிழ்நாடு விவசாய சங்கம், மற்றும் விவசாயிகளின் சார்பில் வறண்டு கிடக்கும் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் சேவை இயக்க மாநில செயலாளர் தங்க சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்க மாநிலக்குழு உறுப்பினர் மணியன், மாவட்ட துணைத்தலைவர் பிச்சைப்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறக்காத கர்நாடக அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். இதில் தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் வரப்பிரசாதம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் தங்கமலை, சாமிதுரை மற்றும் சங்கத்தினர், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Similar News