ஜெயங்கொண்டம் அருகே முந்திரிக்காட்டில் வாலிபர் பிணம்
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த அணைக்குடம் கிராமத்தில் வடக்குவெளியிலுள்ள முந்திரிகாட்டில் சுமார் 30 வயதுமிக்க வாலிபர் ஒருவர், அங்குள்ள முந்திரி மரத்தில் சேலையில் தூக்கிலிட்டு உடல் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தார்.
இந்தநிலையில் அந்த வழியே சென்ற பொதுமக்களுக்கு கடுமையான துர்நாற்றம் வீசியது. இதில் சந்தேகமடைந்த பொதுமக்கள் முந்திரிகாட்டில் சென்று பார்த்தபோது வாலிபரின் பிணத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் தா.பழூர் போலீசுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் இன்ஸ்பெக்டர் ராதாகி ருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த வாலிபரின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் வழக்கு பதிந்து, இறந்த வாலிபர் யார் என்றும், அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அடித்து கொலை செய்தார்களா? என்பது பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.