ஜெயங்கொண்டம் அருகே மினி சரக்கு வேன் மோதி பெண் படுகாயம்
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மணக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பன் மகன் அந்தோணி ஜோசப் (வயது 39). இவர் நேற்று மதியம் தனது மோட்டார் சைக்கிளில் மனைவி ஆரோக்கிய மேரியை அழைத்துக் கொண்டு ஜெயங்கொண்டம் கோர்ட்டுக்கு வந்துள்ளார்.
பின்னர் மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக கீழக்குடியிருப்பு கிராமம் அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த மினி சரக்கு வேன் மோதியது. இதில் பின்னால் உட்கார்ந்து வந்த ஆரோக்கிய மேரி தூக்கி எறியப்பட்டார். பலத்த காயமடைந்தவரை காப்பாற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
இது குறித்து அந்தோணி ஜோசப் ஜெயங்கொண்டம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிவு செய்து மினி சரக்கு வேன் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய கல்லாத்தூர் அண்ணாநகரைச் சேர்ந்த அண்ணாமலை மகன் பழனிசாமி (34) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றார்.