செய்திகள்

பழனியில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2016-09-19 11:26 GMT   |   Update On 2016-09-19 11:26 GMT
பழனியில் இன்று அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பழனி:

பழனி நகராட்சி 13-வது வார்டுக்குட்பட்ட தெரசம்மாள் காலனியில் கடந்த 2 மாதமாக குடிநீர் வினியோகம் இல்லை. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் வார்டு கவுன்சிலருக்கும், நகராட்சி அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் இதே வார்டில் குப்பைகள் மாதக்கணக்கில் அள்ளாமல் உள்ளதாகவும், சாக்கடைகள் சுத்தம் செய்யாமல் இருப்பாகவும் இதனால் இப்பகுதி மக்களுக்கு பலவித நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது என்று கூறி இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உடுமலைப்பேட்டை- தாராபுரம் ரோட்டில் சாமி தியேட்டர் அருகே காலி குடங்களுடன் நடுரோட்டில் அமர்ந்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து கேள்விபட்டதும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மறியல் நடத்திய பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். நகராட்சி அதிகாரிகளிடம் எடுத்து கூறி இப்பகுதி பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டனர்.

பழனியில் பெரும்பாலான வார்டுகளில் இதேபோன்ற நிலமைதான் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

நகராட்சியில் பெரும்பாலான அதிகாரிகள் பற்றாக்குறையால் யாரிடம் புகார் செய்வது என்று தெரியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளையாவது மக்கள் நலன் கருதி உடனுக்குடன் நிறைவேற்றி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News