செய்திகள்

ஆம்பூர் அருகே வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து தூக்கிசெல்ல முயன்ற கொள்ளை கும்பல்

Published On 2016-09-19 04:40 GMT   |   Update On 2016-09-19 04:40 GMT
ஆம்பூர் அருகே வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து தூக்கிசெல்ல முயன்ற கும்பல் போலீஸ் வாகனத்தை கண்டதும் தப்பி ஓடியது. கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:

காட்பாடியில் கடந்த மாதம் தனியார் ஏ.டி.எம். மையம் மற்றும் மேல்மொணவூர் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள தனியார் ஏ.டி.எம். மையத்திலும் கியாஸ் வெல்டிங் மூலம் எந்திரத்தை உடைத்து ரூ.9 லட்சத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

தமிழகத்தில் முதன் முறையாக கியாஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம். மையத்தில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக அரியானா மாநிலத்தை சேர்ந்த டிரைவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மாதனூரில் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ள துணிகரம் மீண்டும் நடந்துள்ளது.

சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் அருகே உள்ள மாதனூரில் ஐ.ஓ.பி. வங்கி ஏ.டி.எம். உள்ளது.

இரவில் மர்ம நபர்கள் ஏடி.எம். மையத்துக்குள் நுழைந்தனர். ஏ.டி.எம்மை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் ஏடி.எம்.மை உடைக்க முடியவில்லை. இதனால் அவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து லாவகமாக தூக்கி செல்வதற்கு முடிவு செய்துள்ளனர்.

இதற்காக ஏ.டி.எம். எந்திரத்தை கடப்பாறையால் தோண்டி பெயர்த்தனர். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் போலீஸ் ரோந்து வாகனம் வந்துள்ளது. அதனை கண்டதும் கும்பல் தப்பி சென்று விட்டனர். இதனால் பல லட்சம் பணம் தப்பியது.

ரோந்து போலீசார் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்தது கண்டு திடுக்கிட்டனர். இதுபற்றி ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏ.டி.எம். மையம் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஏ.டி.எம். மைய கதவுகளை போலீசார் மூடினர்.

கொள்ளை கும்பல் 5-க்கும் மேற்பட்டோர் காரில் வந்ததாக கூறப்படுகிறது வடமாநில கும்பல் இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து தூக்கி சென்று பின்னர் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டு வந்துள்ளனர். சம்பவம் நடந்த ஏ.டி.எம். மையம் தேசிய நெடுஞ்சாலையில் தனியாக உள்ளது. அருகில் வீடு, அலுவலகங்கள் இல்லை. தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ளதால் எளிதில் கொள்ளையடித்து விட்டு தப்பிவிடலாம் என நினைத்து கொள்ளை முயற்சியில் இறங்கியுள்ளனர்.

காட்பாடி, மேல்மொணவூர் ஏ.டி.எம். கொள்ளைக்கு பின்னர் போலீஸ் சூப்பிரண்டு பகலவன் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வங்கி அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் காவலர்களை நியமிக்க வேண்டும். கட்டாயம் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

மாதனூர் ஏ.டி.எம்.மில் காவலர் இல்லை. கொள்ளை கும்பல் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளை கும்பலை பிடிக்க வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தபட்டுள்ளனர். இதற்காக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News