சிதம்பரத்தில் விபத்தில் சிக்கிய கியாஸ் டேங்கர் லாரி பாலத்தில் நின்றதால் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
சிதம்பரம்:
சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு கியாஸ் டேங்கர் லாரி புறப்பட்டது. அந்த லாரி இன்று காலை 8 மணி அளவில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கடவாச்சேரியில் உள்ள பாலத்தில் வந்து கொண்டிருந்தது.
திடீரென்று லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி தடுப்பு சுவரில் மோதி பாலத்தின் குறுக்கே நின்றது.இதனால் அந்த வழியாக மற்ற வாகனங்கள் எதுவும் செல்ல முடியவில்லை.
இன்று முகூர்த்த நாளாகும். மேலும் தொடர் விடுமுறை காரணமாக ஏராளமானோர் வாகனங்களில் சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்தனர். அவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
விபத்துகுறித்து போலீசுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் வெகு நேரமாகியும் யாரும் வரவில்லை.
சம்பவம் நடந்த 4 மணி நேரத்திற்கு பின்னர் சிதம்பரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமையில் போலீசார் அங்கு வந்தனர்.
அதைத்தொடர்ந்து ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு பாலத்தின் குறுக்கே நின்ற கியாஸ் டேங்கர் லாரியை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது.
சிறிது நேரத்தில் லாரி அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து 12 மணி அளவில் அந்த வழியாக போக்குவரத்து தொடங்கியது.
கியாஸ் டேங்கர் லாரி பாலத்தின் குறுக்கே நின்றதால் சிதம்பரம்- கும்பகோணம் சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.