செய்திகள்

விநாயகர் சதுர்த்தியால் வாழைத்தார் விலை உயர்வு

Published On 2016-09-01 16:45 IST   |   Update On 2016-09-01 16:45:00 IST
விநாயகர் சதுர்த்தி பண்டியைகை முன்னிட்டு வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது. சாதாரண நாட்களை விட தற்போது தாருக்கு ரூ.100 அதிகரித்துள்ளது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலை, உலகம்பட்டி, கரையான்பட்டி, கோட்டூர் ஆவாரம்பட்டி, ஆடலூர், பன்றிமலை போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வாழைத்தார் சிறுமலை செட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

வியாபாரிகளால் ஏலம் எடுக்கப்பட்டு அதன் பிறகு உள்ளூர் வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் வாழைத்தார் ஏலம் விடப்படும். தற்போது விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு இன்றும் வாழைத்தார் ஏலம் நடந்தது.

ரூ.500-க்கு வாங்கப்பட்ட நாட்டு வாழைத்தார் ரூ.600-க்கும், கற்பூரவள்ளி ரூ.300-ல் இருந்து ரூ.400-க்கும் விற்கப்பட்டது. ஒரு தாருக்கு ரூ.100 அதிகமாக விலை உயர்ந்தது. செவ்வாழைத்தார் ரூ.200 அதிகரித்தது.

இன்று வாங்கப்படும் வாழைத்தார்கள் பழுக்க 4 நாட்கள் ஆகும். 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருவதால் இன்று ஏராளமான வியாபாரிகள் வாழைத்தார்களை வாங்கிச் சென்றனர்.

விவசாயிகள் இது குறித்து தெரிவிக்கையில் தற்போது வாழைத்தார் விளைச்சல் குறைவுதான். கடந்த 2 நாட்களாகத்தான் மழை பெய்கிறது. எனவே இனி வரும் நாட்களில் வாழைத்தார் விளைச்சல் அதிகரிக்கும். சாதாரண நாட்களை விட தற்போது தாருக்கு ரூ.100 அதிகரித்துள்ளது. மழை இல்லாததால் விற்பனைக்கு தார் குறைவாகவே வந்துள்ளது என்று தெரிவித்தனர்.

Similar News