ஈரோடு அருகே கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி
ஈரோடு:
ஈரோடு அருகே உள்ள வில்லரசம்பட்டி எஸ்.எஸ்.வி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரதுமகன் முருகன் (வயது 30) கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
நேற்று வேலைக்கு சென்ற முருகன் மாலையில் வீடு திரும்பினார். அவர் தனது வீட்டின் அருகே உள்ள ஒரு கிணற்று மேட்டில் உட்கார்ந்து இருந்தார்.
அப்போது அவர் திடீர் என்று தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். சத்தம் கேட்டு அவரதுதந்தை கிருஷ்ணன் வந்து பார்த்த போது கிணற்று மேட்டில் உட்கார்ந்து இருந்த மகனை காணவில்லை.
இதனால் கிணற்றுக்குள் எட்டி பார்த்த போது தனது மகன் முருகன் தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருந்தார். இதை பார்த்த கிருஷ்ணன்அதிர்ச்சி அடைந்தார்.
உடனே இது பற்றி ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதிகாரி காளிதாஸ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
70 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் 50 அடி தண்ணீர் உள்ள அந்த கிணற்றில் தீயணைப்பு வீரர்கள் இறங்கி முருகனை மீட்டனர். இருப்பினும் அவர் கிணற்றுக்குள்ளே இறந்து விட்டார்.
இதனால் முருகனின் உடல் பிரேத பரிசோதனைக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது,
இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செயள்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.