பவானி அருகே தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
ஈரோடு:
நசியனூர் அருகே உள்ள வேட்டுவபாளைத்தை சேர்ந்தவர் பாலாஜி. இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் பூஜா (வயது 14). இவர் திண்டலில் ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
பள்ளியில் நன்றாக படிக்கும் இவர் தேர்வின்போது ஒருவித படபடப்புடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பூஜா ஆஸ்பத்திரியில் மனநல ஆலோசனை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று பூஜா தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது துப்பாட்டாவால் பேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நேரத்தில் வெளியில் சென்று இருந்த அவரது தாயார் வீட்டுக்கு வந்தபோது வீடு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது பூஜா தூக்கில் தொங்குவதை பார்த்து அவரது தாயார் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
பூஜாவின் உடல் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
உடலை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது உருக்கமாக இருந்தது.
இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.