செய்திகள்

குமரி மாவட்டத்தில் சபாநாயகர் உருவப்பொம்மை எரித்த தி.மு.க.வினர் கைது

Published On 2016-08-18 12:34 GMT   |   Update On 2016-08-18 12:35 GMT
குமரி மாவட்டத்தில் சபாநாயகர் தனபால் உருவப்பொம்மை எரித்த தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

தக்கலை:

தமிழக சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலினை சபை காவலர்கள் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர். மேலும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒரு வாரம் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று சபாநாயகர் தனபால் உருவப்பொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.

இன்று காலை தக்கலை பஸ் நிலையம் முன்பு திரண்ட தி.மு.க.வினர் சபாநாயகர் தனபாலின் உருவப் பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

போராட்டத்துக்கு தக்கலை தெற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். பத்மநாபபுரம் நகர செயலாளர் மணி முன்னிலை வகித்தார். போராட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ஜான்கிறிஸ்டோபர், தக்கலை ஒன்றிய பொருளாளர் மதன்குமார், பத்மநாபபுரம் நகர இளைஞர் அணி அமைப்பாளர் ஜான் எப்.டி. சேவியர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரிட்டோ சாம், தலைமை கழக பேச்சாளர் சிலம்பை டென்னிசன், நகராட்சி கவுன்சிலர் ரெங்கசாமி, பேரூர் செயலாளர் எட்வின், முளகுமூடு பேரூராட்சி துணை தலைவர் மனோ, லாரன்ஸ், குமாரசாமி, ஆல்பர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தக்கலை இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து தீயை அணைத்து உருவப்பொம்மையை கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகம் முன்பு சபாநாயகர் உருவப்பொம்மையை நகர செயலாளர் வக்கீல் மகேஷ் தலைமையிலான தி.மு.க.வினர் எரிக்க முயன்றனர். போலீசார் விரைந்து வந்து உருவப்பொம்மையை எரிக்க விடாமல் தடுத்து அதனை கைப்பற்றினர். பின்னர் வக்கீல் மகேஷ், முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன், முன்னாள் எம்.எல்.ஏ. பெர்னார்டு உள்பட 100 பேரை கைது செய்தனர்.

ராஜாக்கமங்கலம் சந்திப்பில் ஒன்றிய செயலாளர் சற்குரு கண்ணன் தலைமையில் தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

குளச்சல் போலீஸ் நிலையம் முன்பு சபாநாயகர் உருவப்பொம்மையை எரிக்க தி.மு.க.வினர் தயாராக நின்றனர். அவர்களை போலீசார் தடுத்து உருவப்பொம்மையை கைப்பற்றினர். இதையடுத்து தி.மு.க.வினர் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

போராட்டத்துக்கு நகர செயலாளரும், நகரசபை தலைவருமான நசீர் தலைமை தாங்கினார். பி.எஸ்.பி. சந்திரா, கோபால் தாஸ், சபீக் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Similar News