வேதாரண்யத்தில் தலைமை ஆசிரியர் வீட்டில் 11 பவுன் நகை கொள்ளை
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம்- திருத்துறைப்பூண்டி மெயின் ரோட்டில் சர்வகட்டளை பகுதியில் மாடி வீட்டில் வசித்து வருபவர் தட்சிணா மூர்த்தி.
இவர் தோப்புத் துறையில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் குடும்பத்துடன் சென்னை சென்றார்.
வீட்டிற்கு காவலுக்கு ஒருவரை நியமித்து சென்றார். தலைமை ஆசிரியர் வெளியூர் செல்வதை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் பின் பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தது.
பின்னர் வீட்டின் 4 கதவுகளின் பூட்டையும் உடைத்து உள்ளே சென்றது. அதன் பிறகு பீரோவை உடைத்தது. அங்கு தலையணைக்கு அடியில் 11 பவுன் நகையை தட்சிணாமூர்த்தி வைத்து இருந்தார். தலையணையை உதறி நகைகளை கொள்ளை கும்பல் எடுத்து கொண்டு தப்பி ஓடி விட்டது.
இன்று காலை தட்சிணா மூர்த்தி வீடு திரும்பினார். அப்போது கொள்ளை நடைபெற்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டு வருகிறது.
தலைமை ஆசிரியர் வீட்டில் நகை கொள்ளையடிக்கப்ப்ட சம்பவம் வேதாரண்யத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.