காதலிக்க மறுத்த பெண்ணை கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி
திருப்புவனம்:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பக்கமுள்ள கீழடியை சேர்ந்த 18 வயது இளம்பெண் மதுரையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலைபார்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகே வசித்து வரும் வேல்முருகன் (வயது20). அப்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று தனது வீட்டின் பின் புறத்தில் துணியை காய வைக்க சென்ற இளம் பெண்ணை சந்தித்த வேல்முருகன், தன்னை காதலிக்கும்படி கூறினார். அதற்கு அப் பெண் மறுப்பு தெரிவித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த வேல்முருகன் இளம்பெண்ணை கத்தியால் குத்தி கழுத்தை அறுக்க முயன்றார். அவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததை பார்த்ததும் அங்கிருந்து வேல்முருகன் தப்பி ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த இளம் பெண் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை தேடி வருகிறார்கள்.