செய்திகள்

கல்லல் அருகே 4 மாத குழந்தையுடன் தாய் கொலை: கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்தது அம்பலம்

Published On 2016-08-05 22:52 IST   |   Update On 2016-08-05 22:52:00 IST
கள்ளக்காதல் விவகாரத்தில் தாய் மற்றும் 4 மாத குழந்தையை கொலை செய்து கிணற்றில் வீசியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அதன்பேரில் உறவினர் பெண், வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கல்லல்:

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள புரண்டி கிராமத்திற்கு செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான ஒரு தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்து கிணற்றில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மிதந்த மூடையில் ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை பிணம் இருந்தது. இதனை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டது புரண்டி கிராமத்தைச் சேர்ந்த அழகு என்பவரின் மனைவி ராசாத்தி என்ற முத்துலட்சுமி (வயது 35), அவருடைய 4 மாத ஆண் குழந்தை ஹரீஸ் என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கருப்புச்சாமி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், ரமேஷ், கணபதி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது. அதன்படி தனிப்படை போலீசார் முதல்கட்ட விசாரணையை தொடங்கினர். கடந்த மாதம் 14–ந்தேதி வங்கிக்கு பணம் எடுக்க சென்ற தனது மருமகளை காணவில்லை என்று அவரது மாமனார் கருப்பசாமி கல்லல் போலீசில் புகார் அளித்து இருந்தார். ஆனால், சாக்கு மூடையில் இருந்த பெண்ணின் பிணம் நைட்டி அணிந்த நிலையில் இருந்தது.

இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் அழகுவின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, முத்துலட்சுமியின் கைப்பையும் வீட்டில் இருந்துள்ளது. அதில், வங்கி குறித்த ஆவணங்களும் இருந்துள்ளன. வங்கிக்கு சென்றவர் கைப்பையின்றி, நைட்டியுடன் சென்று இருக்க முடியாது. இதனால், இந்த கொலை சம்பவத்தில் அவரது வீட்டில் உள்ளவர்கள் யாருக்காவது தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்பட்டனர். அதன்பேரில், அவரது வீட்டில் உள்ள அனைவரிடமும் போலீசார் தனித்தனியாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் முத்துலட்சுமி அவரது குழந்தை இருவரையும், அழகுவின் தம்பி மனைவி ஜோதி (26) மற்றும் உறவினர் முருகன் (31) இருவரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. அதன்பேரில் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்களிடம் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதன்விவரம் வருமாறு:–

அழகுவின் தம்பி கணேசன். இவரது மனைவி ஜோதி. அழகுவும், கணேசனும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். இதனால், மாமனார், மாமியாருடன் மருமகள்கள் முத்துலட்சுமி, ஜோதி இருவரும் வசித்து வந்தனர். இந்த நிலையில் இவர்கள் வீட்டின் அருகே உள்ள உறவினர் முருகன் என்பவருக்கும் ஜோதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதனால், இருவரும் தனியே அடிக்கடி சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதனை தெரிந்து கொண்ட முத்துலட்சுமி அவர்கள் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனாலும், அவர்கள் தங்களது பழக்கத்தை கைவிடவில்லை. இதனால், முருகனின் வீட்டில் தெரிவித்துவிடுவேன் என்று கூறி முத்துலட்சுமி எச்சரித்துள்ளார். இதனால், தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள முத்துலட்சுமியை தீர்த்துக்கட்டுவது என்று முருகனும், ஜோதியும் முடிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில், சம்பவத்தன்று முருகனின், தாயை பார்க்க அவரது வீட்டிற்கு முத்துலட்சுமி சென்றுள்ளார். அப்போது, முருகன் மட்டுமே வீட்டில் இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்த முருகன் செல்போன் மூலம் தகவல் தெரிவித்து ஜோதியை அங்கு வரவழைத்தார். பின்னர், இருவரும் சேர்ந்து முத்துலட்சுமியை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். அப்போது, திடீரென குழந்தை அழத்தொடங்கியதால், மாட்டிக் கொள்ளக்கூடாது என்று அவர்கள் குழந்தையையும் கொலை செய்துள்ளனர்.

பின்னர், முருகன் அவர்கள் இருவரின் உடலையும் வீட்டின் பின் பகுதியில் மறைத்து வைத்துள்ளார். ஜோதி வீட்டிற்கு சென்றுவிட்டார். வீட்டில் இருந்தவர்களிடம் ஜோதி, கல்லில் உள்ள வங்கிக்கு பணம் எடுக்க முத்துலட்சுமி சென்றுள்ளதாக தெரிவித்து நாடகமாடி உள்ளார்.

பின்னர், நள்ளிரவு எழுந்த முருகன் முத்துலட்சுமியின் உடலை இருதுண்டுகளாக வெட்டி அதனையும், குழந்தையின் உடலையும் மூடைகளில் கட்டினார். பின்னர், அங்கிருந்து ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள தோட்டத்து கிணற்றுக்கு மோட்டார் சைக்கிளில் வைத்து மூடைகளை கொண்டு சென்று கல்லைக்கட்டி போட்டுவிட்டு வந்துள்ளார்.

கல்லைக்கட்டி மூடையை போட்டால் யாருக்கும் தெரியாது என்று நினைத்ததாகவும், ஆனால், உடல் தண்ணீரில் உப்பி வெளியே வந்துவிட்டதால் தாங்கள் மாட்டிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

Similar News