செய்திகள்

தேவகோட்டையில் சாலையில் பிணமாக கிடந்த விவசாயி: முன்விரோதத்தில் கொலை?- மகன் பேட்டி

Published On 2016-07-16 16:28 IST   |   Update On 2016-07-16 16:28:00 IST
சாலையில் பிணமாக கிடந்த விவசாயி முன் விரோதத்தில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என அவரது மகன் கொடுத்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேவகோட்டை:

தேவகோட்டை அருகே உள்ள கீழவயல் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் என்ற கிட்டு (வயது52). விவசாய பணி செய்து வந்த இவர் நில புரோக்கராகவும் செயல்பட்டு வந்தார்.

கடந்த 11–ந்தேதி இரவு வெளியே சென்ற கிருஷ்ணன் தேவகோட்டை–சிவகங்கை சாலையில் இரவில் பிணமாக கிடந்துள்ளார். வாகன விபத்தில் அவர் பலியாகி இருக்கலாம் என கருதப்பட்டது. இது தொடர்பாக விபத்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விவசாயி கிருஷ்ணன் முன் விரோதத்தில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அவரது மகன் சுரேஷ் (32) உறவினர்களுடன் தேவகோட்டை காவல் நிலையம் வந்து ஒரு மனு கொடுத்தார்.

அதில் 2 மாதத்துக்கு முன்பு தனது தந்தை மீது ஒரு வாகனம் மோதியதாகவும் அதில் லேசான காயத்துடன் அவர் உயிர் தப்பிய நிலையில் இது குறித்து போலீசில் புகார் செய்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது சாலையில் பிணமாக கிடந்த தந்தை (கிருஷ்ணன்) முன் விரோதத்தில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது என குறிப்பிட்டு உள்ளார்.

புகாரை பெற்று கொண்ட சப்–இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், இது குறித்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News