செய்திகள்

பவானிசாகரில் தினமும் குடித்துவிட்டு ரகளை செய்ததால் கணவரை கொன்றேன்: கைதான மனைவி வாக்குமூலம்

Published On 2016-07-13 09:58 IST   |   Update On 2016-07-13 09:58:00 IST
பவானிசாகரில் தினமும் குடித்துவிட்டு ரகளை செய்ததால் கணவரை கொன்றதாக கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அருகே உள்ள கொத்தமங்கலம் இந்திரா நகரை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி வேலன் (வயது 45).

இவரது மனைவி பெயர் ஷோபனா. ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த 7-ந்தேதி வேலன் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வேலன் திடீரென இறந்து விட்டார் என கூறி உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உறவினர்களும் வந்து குவிந்தனர்.

ஆனால் வேலனின் உறவினர்களுக்கு அவரது சாவில் சந்தேகம் ஏற்பட்டது.

வேலனின் தங்கை மாலதி கோவை மாவட்டம் சிறுமுகை அடுத்த ஓதிமலையில் வசித்து வருகிறார். அவர் பவானிசாகர் போலீசில் என் அண்ணன் உடலில் ரக்கக்காயம் உள்ளது. அவரது சாவில் மர்மம் உள்ளது என்று புகார் கூறினார்.

புகாரை பெற்று கொண்ட பவானி சாகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி அதிரடி விசாரணையில் இறங்கினார். சத்தியமங்கலம் துணை சூப்பிரண்டு மோகனும் விசாரணை மேற்கொண்டனர்.

பிரேத பரிசோதனையில் வேலன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையொட்டி போலீசார் வேலனின் மனைவி ஷோபனாவை அதிரடியாக கைது செய்தனர்.

கொலை நடந்த அன்று வேலன் வீட்டுக்கு குடிபோதையில் வந்துள்ளார். அப்போது மனைவி ஷோபனா அவரை கண்டித்து உள்ளார். இருவருக்கும் காரசார வாக்குவாதம் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறே கொலையில் முடிந்து உள்ளது.

கணவரை கொலை செய்தது ஏன் என்பது பற்றி கைதான ஷோபனா போலீசாரிடம் கூறியதாவது:-

என் கணவர் மது போதைக்கு அடிமையாகி இருந்தார். தினமும் குடித்துவிட்டு என்னை அடித்து உதைப்பார். சில சமயம் என்னையையும் பிள்ளைகளையும் வீட்டில் அடைத்து வைத்து கதவை பூட்டிக்கொண்டு சென்று விடுவார். ஒரு நாள் அல்லது 2 நாள் கழித்து வந்து வீட்டின் கதவை திறப்பார்.

இப்படி அவரது கொடுமைக்கு அளவே இல்லாமல் போனது.

சம்பவத்தன்றும் குடித்துவிட்டு வந்து ரகளை செய்தார். அடித்து உதைத்தார் ஆத்திரத்தில் மண்வெட்டி கட்டையால் அவரை அடித்தேன். இதில் அவர் இறந்து விட்டார்.

மேற்கண்ட தகவலை அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட ஷோபனா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News