காரைக்குடியில் மினி பஸ் டிரைவர் கொலை
காரைக்குடி:
காரைக்குடி நக்கீரன் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஹரிகரன் (வயது22), மினி பஸ் டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் ரம்யா. இவர் ஒரு கல்லூரியில் படித்து வந்தார். அப்போது மினி பஸ்சில் பயணம் செய்தபோது ஹரிஹரனுக்கும், ரம்யாவுக்கும் காதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் குடும்பத்திற்குள் எதிர்ப்பு இருந்து வந்தது.
இந்த நிலையில் ஹரிகரன் அடிக்கடி குடித்து விட்டு வருவதால் கணவன்- மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபித்து கொண்டு ரம்யா தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
தனியாக வசித்து வந்த நிலையில் இன்று அதிகாலையில் வீட்டின் அருகே ஹரிகரன் தலையில் தாக்கப்பட்டும், கழுத்து நெரிக்கப்பட்ட நிலையிலும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் இக்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்.
இந்த கொலை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.