செய்திகள்

கோவில் திருவிழாவில் பெண்களிடம் நகை பறித்தவர் கைது

Published On 2016-07-06 22:49 IST   |   Update On 2016-07-06 22:49:00 IST
சிவகங்கை அருகே கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் நகை பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை:

சிவகங்கையை அடுத்த நாட்டரசன் கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடந்த மாதம் வெள்ளிரதம் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை காண வந்த 4 பெண்களிடம் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மர்மநபர் நகைகளை திருடிச் சென்றுள்ளார்.

இதுதொடர்பாக சிவகங்கை தாலுகா சப்–இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. தனிப்படையினர் நடத்திய விசாரணையில் மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த பதினெட்டான்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 42) என்பவர் கோவில் திருவிழாவில் கூட்டநெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் நகை பறித்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து போலீசார் ஆறுமுகத்தை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சிவகங்கையை அடுத்த மலம்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து நகை, பணம் ஆகியவற்றை திருடியதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவரிடம் இருந்த 21 பவுன் தங்கநகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News